Wednesday 25 November 2009

மும்பைத் தாக்குதல் முதலாம் ஆண்டு.(காணொளி)



சென்ற வருடம், நவம்பர் 26 ஆம் தேதி, இந்தியாவே துடித்துக்கொண்டிருந்தது! இந்தியா சந்தித்த மிக மோசமான தருணங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவின் மீது தீராத வெறிக்கொண்ட பகைவர்களால் மிகவும் பயங்கரமாக அரங்கேற்றப்பட்ட கொடிய கொலைவெறித் தாக்குதல் இது. குறைந்தது 173  உயிர்களை பலிக்கொண்ட இந்த காடுமிரண்டித்தனத்தை,   நம்மில் நிறையப் பேருக்கு  தெளிவாக எடுத்துச் சொல்ல நம்ம நாட்டில் சரியான ஆட்கள் இல்லை. ஆனால் இங்கிலாந்து நாட்டின் துணிவுமிக்க தொலைகாட்சி நிறுவனமான 'சேனல் 4' தொலைகாட்சி, சென்ற ஜூன் மாதம் 29 ஆம் தேதி ஒளிப்பரப்பிய ' Terror in Mumbai ' என்ற ஆவணப்படம் உலகையே உலுக்கியது.  பார்த்தவர்களை நெஞ்சம் பதற வைத்தது.  முன்பே திரைக்கதை எழுதி படமாக்கப்படும் திகில் படங்கள் கூட இப்படி நம்மை உறையவைக்குமா என்றுத் தெரியவில்லை! எங்கெங்கோ கிடைத்த பல உண்மை  வீடியோக்களைக் கொண்டு ஒரு முழுப் படமாக மாற்றி இருக்கும், பல விருதுகளைப் பெற்ற டான் ரீட் அவர்கள் தயாரித்து இயக்கிய சிறந்தக் காணொளியாகும். இது மீண்டும் இன்றும் நாளையும் அதேத் தொலைக்காட்சியில்  மறு ஒளிப்பரப்பப்படுகிறது.


இந்த காணொளியில், இந்தியாவில் நுழைந்த 10 தீவிரவாதிகள்,மும்பை நகரில் கால் வைத்ததிலிருந்து,வெறியாட்டம் ஆடி முடித்தவரையிலான ஒவ்வொரு மணித்துளிகளையும் அணுவணுவாக விவரிக்கிறது. தற்போது காவல்துறையிடம் சிக்கி, தன் இஷ்டத்திற்கு 'அது வேண்டும், இதுவேண்டும்' என்று இன்னும் உயிரோடு பேசிக்கொண்டிருக்கும் காசாப் என்ற விஷ ஜந்துவிடம் காவலர் நடத்திய விசாரணையும்,  அந்தக் கொடியவர்கள் , தங்கள் நாட்டிலுள்ள மனிதநேயம் மறந்த,  தன் மக்கள்மீதே தாக்குதல்  நடத்தும்  தீவிரவாத தீயசக்திகளோடு பேசிய தொலைப்பேசி பேச்சுக்களும் இணைக்கப்பட்டுள்ளன.     அந்தத் தாக்குதலில் படுகாயமடைந்து உயிர்பிழைத்த காவலர் மற்றும் பொதுமக்களின் பேட்டிகளையும் மனதுருக விவரிக்கிறது.
(ஆகவே இளகிய மனது கொண்டவர்கள் இதைப் பார்ப்பதை தவிர்க்கவும்.) 


இந்த உலகம், மதம் என்ற மதம்பிடித்த யானையால் சின்னாபின்னமாகப்படுகிறது. வருங்கால சந்ததியரான நம் குழந்தைகள் மனதிலும் இந்த வன்மம் விதைக்கப்படுகிறது. இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். மதமாச்சர்யங்களை மறந்து, என்று அன்போடும் பண்போடும் வாழ விழைகிறோமோ அன்றுதான் இந்த உலகம் ஒரு மகிழ்ச்சியான சோலையாக இருக்கும். "தன்னைப்போல் பிறனையும் யோசி & நேசி " என்று எல்லா மதங்களும் கூறுகின்றன. ஆனால் அதை மட்டும் விட்டுவிட்டு, அதில் சொல்லியுள்ள கெட்ட விஷயங்களையே எல்லோரும் பின்பற்றுகின்றனர் என்பது விந்தையும், வேதனையுமாக உள்ளது. 

இந்தப் பதிவின் மூலமாக இந்தத் தாக்குதலில் உயிர்நீத்த அப்பாவி பொதுமக்களுக்கும், அவர்களின்பால் தங்கள் இன்னுய்ரை தியாகம் செய்த காவல் துறை கடமை வீரர்களுக்கும் நம் அஞ்சலியை செலுத்துவோம். வாழ்க இந்தியா! வெல்க மனிதநேயம்.!!








No comments:

Post a Comment

ஊக்க உரைகள்