Tuesday, 23 June 2009

The Killing Fields - உலகின் தலை சிறந்த திரைப்படங்கள்.


வியட்னாம் போர் முடிந்து, மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நினைத்த நேரம், 1975 முதல் 1979 வரை, மீண்டும் உலக மக்களை கவலை கொள்ளச்செய்த நாடு கம்போடியா!
' கெமர் ரூஷ்', என்று அழைக்கப்பட்ட, வலதுசாரி கம்யூனிஸ்ட் சித்தாந்த, தீவிரவாத கும்பல், கம்போடியாவை தன் கட்டுக்குள் கொண்டு வந்தது. அதன் தலைவன், ' போல் பாட்' என்ற படித்த, மனித மிருகம். பிரான்சு நாட்டில் பட்டப்படிப்பு படித்த அவன், திரும்பி வந்தது, தீவிர கம்யூனிஸ்ட் சித்தாதங்களோடுத்தான். இவர்களுக்கு நன்கு படித்தவர்கள், நகரங்களில் வசிப்பவர்கள், வெளிநாட்டு மோகம் அல்லது தாக்கம் உள்ளவர்களைக்கண்டால் பிடிக்காது. கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தான் நாட்டை தாங்கி நிறுத்தும் தூண்கள் என்று, கண்மூடித்தனமாக நம்பினார்கள். மேலும் வயதான, நடுத்தர வயதுள்ள பெற்றோர்கள் எல்லாம், மேற்கத்திய ஏகாதிப்பத்திய எண்ணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கருதப்பட்டனர். ஆகவே அவர்கள் எல்லாம் கண்மூடித்தனமாக சித்தரவதை செய்யப்பட்டு, கிராமங்களுக்கு இழுத்துச்செல்லப்பட்டு, வயல்களில் கடுமையாக உழைக்கத் தள்ளப்பட்டனர்.
முரண்டு பிடித்தவர்கள் ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவிக்கப்பட்டனர்.
இது இல்லாமல், பட்டினி, நோய் போன்றவற்றால் வேறு சாவை எதிர்க்கொண்டார்கள். " நீ உயிருடன் இருப்பதால் எனக்கு லாபம் எதுவும் இல்லை, நீ செத்துப்போனால் நஷ்டம் எதுவும் இல்லை!" இப்படிப்பட்ட கொள்கையை கொண்ட கொடுங்கோலரிடம் ஆட்சி இருந்தால் மக்களின் நிலையை சொல்லி புரியவைக்க முடியாது. இவர்கள் கொன்று குவித்த, தன் சொந்த நாட்டு மக்களின் எண்ணிக்கை, உலகிற்கு தெரிந்த வரையில் 1.7 மில்லியன். இது மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதி. அப்படி கொன்ற உடல்களை வீசிய , புதைத்த இடங்களைத்தான், ' கம்போடியாவின் கொலைக்களங்கள்' என்று ( The Killing Fields ) என்று அழைத்தார் ஒருவர். அவர் பெயர் ' டித் பிரான் ' ( Dith Pran ), ஒரு கம்போடிய பத்திரிக்கையாளார். படித்தவரான அவர் அந்த கெமர் ரூஷ் கொலைக்காரர்களிடம் சிக்கி, சின்னாபின்னமாகி கொடுமையான கொலைக் களங்களிலிருந்து எப்படித்தப்பிது வருகிறார் என்பதை தத்ரூபமாக சித்தரிக்கும் சித்திரம் தான் 'The Killing Fields '.
அமெரிக்காவின் ' Newyork Times ' பத்திரிகையின் நிருபரான ' சிட்னி ஷேன்பேர்க் ' என்பவருக்கு உதவி செய்ய நியமிக்கப்படுகிறார் டித் பிரான். இவர்களுக்கிடையில் ஏற்படும் கவித்துவமான நட்பும், கெமர் ரூஷ் ஆட்சியின் கொடுரமும், அவர்களிடம் சிக்கிய பிரான் எப்படி தப்பிக்கிறார் என்பதுவும் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது. பிரானாக Dr. Haing S Ngor நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்துள்ளார் எனபது சாலப்பொருந்தும். ஏன் என்றால் அவர் தன் உண்மை வாழ்கையிலும் படத்தில் உள்ள அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்தவர். நிஜ வாழ்க்கையில் மருத்துவரான அவர், இப்படத்தில் நடித்ததற்காக 1985 ஆம் வருடத்திற்கான சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றார். மேலும் அந்த வருடத்தின் சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கர் விருதுகளையும் தட்டிச் சென்றது. முழு படத்தையும் பார்க்கும்போது, ஒரு இடத்திலாவது கண் கலங்காதவர்களே இருக்க முடியாது.
இப்படத்தில் நாயகன் சிட்னியும், ( Sam Waterson, ஆஸ்கர் சிறந்த நடிகருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர், வரும்காலத்தில் நம்மவூர் Sam Andrason கூட அவ்வாறு செல்வார் என்று நம்புவோமாக!) பிரானும் சந்திக்கும் இடத்தில் வரும், 'John Lennon' பாடிய Imagine பாடலின் பின்னணியில் ' என்னை மன்னிப்பாயா,பிரான்? என்று சிட்னி கேட்க, பிரான் புன்னகையுடான்,' மன்னிப்பதற்கு எதுவுமில்லை, சிட்னி, மன்னிப்பதற்கு எதுவுமில்லை ' என்று கூறி இருவரும் தழுவிக்கொள்ளும் காட்சி, மனதை நெகிழ வைக்கும் மிகவும் புகழ்பெற்ற காட்சி.
பார்கதவர்கள் எங்காவது தேடிப்பிடித்தது பாருங்கள். பார்த்து விட்டு உங்களுக்கு 'எதைப்பற்றி' ஞாபகம் வந்தது என்று என்னக்கும் சொல்லுங்கள்.

இந்த சாம்பிள் வீடியோக்களையும் பாருங்கள்.


























வருகைக்கு நன்றி. வோட்டும் கருதும் இடுவது உங்கள் உரிமை.

4 comments:

  1. அருமையான படம் நிறைய இடங்களில் கண் கலங்கும் கிட்ட தட ஈழத்திலும் இப்போ இதே நிலைமை தான் .

    ReplyDelete
  2. இத்திரைப்படத்தை 1985 இல் பார்த்தேன். குறைவான ஆங்கில அறிவின் காரணமாகவும் வியட்நாமையும் கம்போடியாவையும் போட்டு குழப்பியதனாலும் கதையின் கள அமைப்பு சரியாக புரியவில்லை. ஆனால் திரைப்படத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. மீண்டும் 1987 இல் பார்த்தேன். அப்போது ஈழத்தில் இந்திய ராணுவமும் அவர்களின் கைக்கூலிகளான ‘திரீ ஸ்ரார்’ - ஈ.பி.ஆர்.எல்.எஃப், டெலோ, புளொட்- இணைந்து அட்டூழியம் செய்து கொண்டிருந்தனர். கம்போடிய அளவுக்கு இல்லாவிட்டாலும் ஈழத்து மக்களுக்கு மிகவும் புதியது தான் இக்கொடுமை. அதனை உணர்ந்த்தனால் எனக்கு இன்னும் அப்படத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதில் பெரிய ஜோக் என்னவென்றால் திரீஸ்ராரை காப்பாற்ற ‘இந்து’ பத்திரிகை பிரபாகரனை ‘பொல்-பொட்டிஷ் லீடர்’ என அழைத்தது தான். இத்தனைக்கும் இந்து ராமின் எஜமானர்களான சீனா வளர்த்து விட்டது தான் ‘பொல்-பொட்’ இயக்கம்! பொல் பொட் இறக்கும் வரை காப்பாற்றியது சீனா தான்.
    நிற்க இதில் இன்னொரு வேதனையான சம்பவம் டித் பிரானாக நடித்தவர் பத்து பன்னிரண்டு வருடங்களின் முன்னர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைக்கொன்றதில் யார் பங்கு என்பது இன்னும் புதிர் தான். கொலை நடைபெற்ற விதம் சாதாரன கொள்ளை போல் இருந்தாலும் காமர்ரூச் இயக்கத்தின் ஆதரவாளர்கள் பழிதீர்த்தனர் என நம்புவோரும் உண்டு!

    ReplyDelete
  3. நான் பார்த்திருக்கிறேன். அற்புதமான படம்தான். எனக்கும் "அதைப்பற்றி" ஞாபகம் வந்தது.

    ReplyDelete
  4. உங்களின் அருமையான கருத்துக்கு மிகவும் நன்றி நண்பர்களே. இதில் இன்னொன்று என்னவென்றால், அந்த காலகட்டத்தில், அந்த கொடுமைகளை நேரில் பார்த்த மக்களுக்கு , அதன் தாக்கம் இன்னும் மறக்கமுடியவில்லையாம். நம்மவர்களுக்கு எப்படி இருக்குமோ என்று போக போகத்தான் புரியும்.
    நண்பர்களே அடிக்கடி சந்திப்போம். நல்ல திரைப்படங்களை நினைத்து சிந்திப்போம்.

    ReplyDelete

ஊக்க உரைகள்